மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயற்சி


மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 13 March 2020 12:00 AM GMT (Updated: 12 March 2020 8:16 PM GMT)

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை கீச்சாங்குப்பம் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த மோதலை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் உத்தரவிட்டார்.

போலீஸ் குவிப்பு

அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்வதற்காக நேற்று நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றனர்.

அதிகாரிகள் வருகையையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் துறைமுக பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

தீக்குளிக்க முயற்சி

வலைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் வருவதை அறிந்த மீனவ பெண்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கையில் மண்எண்ணெய் கேனுடன் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள், ‘எங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ய விடமாட்டோம்’ என்று கூச்சலிட்டனர்.

அதில் சில பெண்கள் தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி அதிகாரிகள் முன்னிலையிலேயே தீக்குளிக்க முயன்றனர். அவர்களை பெண் போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். முன்னதாக வலையை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள், மீனவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story