சர்ச்சையில் இருந்து சமரசம் என்ற புதிய வருமானவரி திட்ட செயல்பாடுகள் பற்றிய கருத்தரங்கு முதன்மை தலைமை கமிஷனர் பங்கேற்பு
வரி செலுத்துபவர்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட ‘சர்ச்சையில் இருந்து சமரசம்’ என்ற புதிய வருமானவரி திட்ட செயல்பாடுகள் பற்றிய கருத்தரங்கு சென்னையில் நடந்தது. இதில் வருமானவரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் அனு ஜெ.சிங் பங்கேற்றார்.
சென்னை,
வருமானவரி தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் ‘சர்ச்சையில் இருந்து சமரசம்’ (விவாத் சி விஸ்வாஸ்) திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தால் வருமானவரி செலுத்துபவர்கள் எவ்வாறு பயனடைகின்றனர் என்பது குறித்த தணிக்கையாளர்களுக்கு விளக்கும் வகையிலான கருத்தரங்கம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கருத்தரங்கை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில முதன்மை தலைமை வருமானவரி கமிஷனர் அனு ஜெ.சிங் தொடங்கி வைத்து பேசியதாவது:-
உறுதுணையாக....
வரி செலுத்துபவர்களின் நலன் கருதி தற்போது ‘விவாத் சி விஸ்வாஸ்’ என்று அழைக்கப்படும் ‘சர்ச்சையில் இருந்து சமரசம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வரி செலுத்துபவர்கள் தாமாக முன்வந்து வரி செலுத்தும் வகையில் பல்வேறு சலுகைகள் உள்ளன. இருந்தாலும் தணிக்கையாளர்களுடனும், வக்கீல்களுடனும் எப்போதும் நாமும் நட்புறவுடன் செயல்படுவதுடன், தாமாக முன்வந்து வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தால் முழு பலனடைவது குறித்து எடுத்து கூறுவதுடன், திட்டமும் முழுமையாக வெற்றி பெற தணிக்கையாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கமிஷனர்கள் விளக்கம்
தொடர்ந்து திட்டம் குறித்து பவர் பாயிண்ட் மூலம் தணிக்கையாளர்களுக்கு வருமானவரித்துறை கமிஷனர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து தணிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
விழாவில் தணிக்கையாளர்கள் சங்கத்தின் தென்மண்டல கவுன்சில் தலைவர் துங்கர் சந்த் யு.ஜெயின், கூடுதல் கமிஷனர்கள் ஆர்.இளவரசி, பி,ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தணிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கவுன்சில் செயலாளர் அபிஷேக் முரளி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story