பார்மலின் தடவிய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்ட மீன் சந்தைகளில் வியாபாரிகள் பார்மலின் தடவிய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் சந்தைகளில் மீன்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்த, பார்மலின் போன்ற தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு நோய் ஏற்படும் நிலை உருவாகிறது.
இத்தகைய மீன்களை உட்கொள்ளும்போது உடலில் ஒவ்வாமை, வாந்தி, தலைவலி மற்றும் கேன்சர் போன்ற நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
எனவே மீன் சந்தைகளில் வியாபாரிகள் பார்மலின் தடவிய மீன்களை விற்கக் கூடாது. இத்தகைய செயல்களில் மீன் விற்பனையாளர்கள் ஈடுபடுவது மீன் வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ளும் சமயங்களில் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
மேலும் கடை உரிமையாளர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அரசு விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story