மது போதையில் வீட்டுக்கு வந்த கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் சாவு திருவையாறு அருகே பரிதாபம்


மது போதையில் வீட்டுக்கு வந்த கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் சாவு திருவையாறு அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 12 March 2020 9:25 PM GMT)

திருவையாறு அருகே மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மனைவி ரேணுகா(வயது 32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லாரி டிரைவரான தேவேந்திரன், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

இதனால் மன வேதனை அடைந்த ரேணுகா, மது பழக்கத்தை கைவிடும்படி கணவரிடம் வற்புறுத்தி வந்தார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை.

தீப்பிடித்தது

சம்பவத்தன்று தேவேந்திரன் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம் மது பழக்கத்தை கைவிடாவிட்டால் தீக்குளித்து விடுவேன் என கூறிய ரேணுகா, உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி, தீக்குச்சியை பற்ற வைத்து கணவனை பயமுறுத்தி உள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய உடலில் தீப்பிடித்துக்கொண்டது. இதையடுத்து தேவேந்திரன் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ரேணுகாவை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பரிதாப சாவு

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரேணுகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ரேணுகாவின் தாய் நாகலட்சுமி, புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது பழக்கத்தை கைவிடுவதற்காக கணவனை பயமுறுத்திய பெண் தீயில் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story