ரூ.2 கோடி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை - மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு


ரூ.2 கோடி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை - மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை,

திருச்சி திருவானைக்காவலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ரூ.2 கோடியே 2 லட்சத்து 42 ஆயிரத்து 674 வரை வங்கிக்கு இழப்பு ஏற்பட்டது தணிக்கையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ. போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கடந்த 2011-ம் ஆண்டில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தற்போது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கிளையில் தலைமை மேலாளராக பணியாற்றிய ராஜாராம், திருச்சி மண்டல அலுவலகத்தில் மூத்த மேலாளராக பணியாற்றிய ராஜசேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து முருகன் என்ற தனிநபர் பெயரில் வாகன கடன், தனிநபர் கடன் உள்பட பல்வேறு வகையில் கடன் வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜாராம், முருகன், ராஜசேகரன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து ராஜாராமுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேபோல முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதமும், ராஜசேகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.சிவப்பிரகாசம் நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story