கொரோனா வைரஸ் தாக்குதல்: தனிமனித சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் கிரண்பெடி வேண்டுகோள்


கொரோனா வைரஸ் தாக்குதல்: தனிமனித சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 March 2020 11:56 PM GMT (Updated: 12 March 2020 11:56 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக தனிமனித சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மார்பகநோய் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இதற்காக தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர்கள் சோதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பதை கண்டறிய விமான நிலையத்தில் சோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசால் வழங்கப்படும் வழிமுறைகள் குறித்து டாக்டர்களுக்கு நாள்தோறும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

கவர்னர் ஆலோசனை

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கவர்னர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தினை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்பாது கவர்னர் கிரண்பெடி, கொரோனா குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக தினசரி வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கட்டுப்பாட்டு அறை எண்ணான 104 மூலம் இருமொழிகளில் பதில் அளிக்கவும் அறிவுறுத்தினார். தூர்தர்ஷன் மற்றும் கேபிள் டி.வி.க்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார்.

தனிமனித சுகாதாரம்

புதுவைக்கு வரும் பஸ், கார் போன்றவற்றில் பயணிப்பவர்களிடம் சோதனை நடத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும். பிரெஞ்சு தூதரகம் பிரான்சிலிருந்து வருபவர்கள் தொடர்பாக ஒத்துழைக்க தயாராக உள்ளது.

மாகி, ஏனாம் பிராந்தியங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். தனி மனித சுகாதாரம் குறித்து அதிகபட்ச விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

Next Story