கொரோனா பீதியால் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிகிறது


கொரோனா பீதியால்  பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிகிறது
x
தினத்தந்தி 13 March 2020 5:51 AM IST (Updated: 13 March 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பீதியால் மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிகிறது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதில், கடந்த 6-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

மராட்டியத்தில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு வாரத்துக்கு முன்பாக முடிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து எடுக்கப்பட்ட முடிவை மாநில சட்டசபை விவகாரத்துறை மந்திரி அனில் பரப் சட்டசபையில் அறிவித்தாா். அந்த முடிவுக்கு சட்டசபை உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதன்படி நாளையுடன் (சனிக்கிழமை ) மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிகிறது.

வைரஸ் பரவுவதை தடுக்க..

இது குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேசுகையில், ‘‘மக்களின் உடல் நலனே முக்கியம். எம்.எல்.ஏ.க்கள் அவர்களது தொகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சபாநாயகர், மூத்த மந்திரிகள் மற்றும் எதிா்க்கட்சி தலைவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அஜித்பவார், கொரோனா வைரசுக்கு பயந்து அல்ல, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவே பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

ஈரான் போன்ற வெளிநாட்டில் சிக்கியிருக்கும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட பலரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பத்கால்கர் ஆகியோர் சட்டசபையில் வலியுறுத்தினர்.

Next Story