ஐகோர்ட்டு தீர்ப்பு அரசுக்கு சாதகமாக உள்ளது நாராயணசாமி விளக்கம்


ஐகோர்ட்டு தீர்ப்பு அரசுக்கு சாதகமாக உள்ளது நாராயணசாமி விளக்கம்
x
தினத்தந்தி 13 March 2020 12:27 AM GMT (Updated: 2020-03-13T05:57:45+05:30)

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு புதுவை அரசுக்கு சாதகமாக உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் தொடர்ந்த (அதிகாரம் தொடர்பான வழக்கு) வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசும், கவர்னர் கிரண்பெடியும் மேல்முறையீடு செய்தனர். அதில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் தனிநீதிபதியின் சில உத்தரவுகளை ரத்து செய்துள்ளது.

அதேநேரத்தில் பல பரிந்துரைகளை ஐகோர்ட்டு அளித்துள்ளது. எது சரியான செயல்பாடு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். புதுவை யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை கவர்னர் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும். அன்றாட நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. தனிப்பட்ட அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அது கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரத்தை பறிக்க...

குறிப்பாக நாட்டில் அதிகாரம் பெற்றவர்கள் மக்கள்தான். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம். மாநில அரசுக்கான அதிகாரத்தை குறைப்பதோ, அதை பறிக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்களின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்கவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கவர்னர் தனக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் கோப்புகள் தொடர்பாக செயலாளருக்கு கடிதம் எழுதி செயலாளர் தரும் பதில் முதல்-அமைச்சர் வழியாகத்தான் செல்லவேண்டும். அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் நிராகரிக்க முடியாது. கருத்து வேறுபாடுகளை ஜனாதிபதிக்குத்தான் அனுப்பவேண்டும். அதில் திருத்தம் செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

அரசுக்கு சாதகமாக...

மத்திய அரசும் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். 6 மாதம் கழித்து பதில் தரும் முறையை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளது. தனது தீர்ப்பின் 104வது பாராவில் சட்டசபைக்கு மீறிய அதிகாரத்தை நியமிக்கப்பட்டவருக்கு கொடுப்பது நல்லதல்ல என்று கூறியுள்ளது.

ஐகோர்ட்டு தீர்ப்பு 85 சதவீதம் புதுவை அரசுக்கு சாதகமாகவே உள்ளது. கவர்னர் நேரடியாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க முடியாது. முதல்அமைச்சர் மூலமாகத்தான் பதில் பெறவேண்டும் என்று கூறி கவர்னருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

மேல்முறையீடு

அப்படியிருக்க அதிகாரிகளை அழைத்து கவர்னர் கூட்டம்போடுவது என்பது தீர்ப்புக்கு எதிரானது. தற்போது கிடைத்துள்ள தீர்ப்பினை வைத்து அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நிலையாணை பிறப்பிக்கப்படும். இலவச அரிசி விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Next Story