கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு முகக்கவசம் அணிந்து பணியாற்றும் ஊழியர்கள்
புதிய பஸ் நிலையம் வந்த பஸ்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
நெல்லை,
நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று புதிய பஸ் நிலையம் வந்த பஸ்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். மேலும், அங்கு ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றினார்கள்.
கொரோனா வைரஸ்
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக சுகாதாரத்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு கொரோனா பரவாமல் தடுத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கிருமி நாசினி தெளிப்பு
நெல்லையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், ரெயில் நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
நெல்லை ரெயில் நிலையம், பஸ் நிலைய பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், கையுறை அணிந்துள்ளனர். நேற்று நாகர்கோவில், கேரளாவில் இருந்து வருகின்ற பஸ்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். மேலும், நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்கள், விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அவர்களுக்கு கைகழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
குப்பைகள் அகற்றம்
மாநகர பகுதியில் ஆங்காங்கே தேங்கும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. குப்பை போடுகின்ற இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், சுகாதார பணியாளர்கள் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தி வருகிறார்கள்.
சுகாதார பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story