அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு


அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 2:41 PM GMT)

கறம்பக்குடி அருகே வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியில் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் நெருக்கடியான நிலையில் கல்வி பயின்று வருகின்றனர்.

கூடுதல் இட வசதி மற்றும் கட்டிட வசதி வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இப்பள்ளி மாணவர்கள் நேற்று காலை பெற்றோர்களுடன் பள்ளி முன்பு கூடினர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள், பெற்றோர்களின் போராட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story