நெல்லையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி எதிரொலி: சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி


நெல்லையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி எதிரொலி:  சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 14 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 8:27 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி எதிரொலியாக, சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி எதிரொலியாக, சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குண்டும்–குழியுமான சாலை 

நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி பல இடங்களில் நடந்து வருகிறது. தற்போது, நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் மற்றும் டவுன் பொருட்காட்சி திடல் அருகில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும்–குழியுமாக மண் சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் சாலையில் குவிந்து கிடக்கும் மண் மீது தண்ணீரை ஊற்றியதால் சகதியாக கிடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற 2 கன்டெய்னர் லாரிகள் சகதியில் சிக்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அடித்த வெயிலில் அந்த சாலையில் சகதி காய்ந்து விட்டது. சாலை முழுவதும் புழுதி பறந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

கேரள மாநிலம் மற்றும் தென்காசி, செங்கோட்டை, முக்கூடல், கடையம், பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்லைக்கு வருகின்ற பஸ்கள், லாரிகள், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த வழியாக தான் வர வேண்டும். சாலை குண்டும்–குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை 

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் சாலையில் புழுதி பறக்காமல் இருக்க நேற்று லாரி மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு ஓரளவுக்கு புழுதி பறப்பது குறைந்தது.

எனவே அந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குழிகள் 

இதேபோல் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அருகே உள்ள லங்கர்கா தெருவில் மேற்கு திசையில் இருந்து செல்கின்ற வாகனங்களும், பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து வருகின்ற வாகனங்களும் ஒன்று சேருகின்ற இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஒரு குழி கிடக்கிறது. மேலும் அழகுமுத்துகோன் சிலை அருகிலும் மிகப்பெரிய குழி கிடக்கிறது.

அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருகின்ற பலர் குழிகளில் விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே அந்த குழிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story