ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை கலெக்டர் சாந்தா ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமாந்துறையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படவுள்ளதையொட்டி, அங்கு வளர்க்கப்பட்டு வரும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சாந்தா இந்த மரக்கன்றுகளை வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நட்டு, வேப்பூர் ஒன்றியத்தை பசுமை நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி வரும் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்ற கலெக்டர் வீடு கட்டும் பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். பின்னர் திருமாந்துறையில் உள்ள ரேஷன் கடையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், வெங்கடேசன், குன்னம் தாசில்தார் சின்னதுரை, ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி இளையராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story