மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பெரம்பலூர் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல் மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
பெரம்பலூர் கவுதம புத்தர் செவி மற்றும் பேச்சுத்திறன் குறை உடையோர்களுக்கான சிறப்பு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மருத்துவ முகாமில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர்கள் சிவராமன், செந்தில்குமார், மனநல மருத்துவர் மின்னத்துள்முப்பிதா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கீதாஞ்சலி ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை வழங்க பரிந்துரை செய்தனர். முகாமில் 65 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களில் 20 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 17 பேருக்கு அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உதவி உபகரணத்திற்கான அளவீடுகள் எடுக்கப்பட்டது. 18 பேரிடம் இருந்து யு.டி.ஐ.டி.-க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பழங்கள், நொறுக்கு தீனிகளை இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கினர்.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ், இந்தியன் செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை பிரதிநிதிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல பணியாளர்கள், அனைவருக்கும் கல்வி திட்டசிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு இன்று (சனிக்கிழமை) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், குன்னம் தாலுகாவிற்கு 16-ந் தேதி வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு 17-ந் தேதி பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
முகாமில் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்குறிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவை எடுத்து வரவேண்டும்.
Related Tags :
Next Story