எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
போலீசாரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உதவித்தொகை வழங்கினார்.
தூத்துக்குடி,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உதவித்தொகை வழங்கினார்.
உதவித்தொகை
தமிழக போலீசில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தலா 10 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும், சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018–19–ம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமை தாங்கி, பிளஸ்–2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.7 ஆயிரத்து 500, 2–வது இடம் பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரத்து 500, 3–வது இடம் பிடித்தவருக்கு ரூ.3 ஆயிரத்து 500, மற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500–ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.6 ஆயிரத்து 500, 2–வது இடம் பிடித்தவருக்கு ரூ.4 ஆயிரத்து 500, 3–வது இடம் பிடித்தவருக்கு ரூ.2 ஆயிரத்து 500–ம், மற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 8 பேருக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த உதவித்தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேற்று சம்பந்தப்பட்ட புகார்தாரர் மற்றும் வாரிசுதாரர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story