விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம்; கலெக்டர் ரத்னா தகவல்


விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம்; கலெக்டர் ரத்னா தகவல்
x
தினத்தந்தி 14 March 2020 4:00 AM IST (Updated: 13 March 2020 8:59 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துத்தரப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசனம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா தோட்டத்தினையும், 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை தோட்டத்தினையும் மற்றும் பலா ஆகிய தோட்டங்களையும் 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் பந்தல் தோட்டத்தினையும் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களையும் ஆய்வு செய்தார்.

பின்னர், வேளாண்மைத்துறையின் சார்பில் உஞ்சினி கிராமத்தில் மல்லியம்பாள் என்பவரின் விதைப்பண்ணையில் 2.50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை தோட்டத்தினை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் ரத்னா கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகிய திட்டங்கள் மானிய விலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தோட்டக்கலை பயிர்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசன அமைத்து தரப்படுகிறது. 

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் காய்கறி பரப்பு அதிகரித்தல் இனத்தில் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வின் போது அரியலூர் துணை இயக்குனர்கள் அன்புராஜன் (தோட்டக்கலை), பழனிசாமி (வேளாண்மை), உதவி செயற்பொறியாளர் இளவரசன், உதவி இயக்குனர்கள் பெரியசாமி (தோட்டக்கலை), ஜென்ஸி (வேளாண்மை) மற்றும் உதவி தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story