நிலுவையில் உள்ள குடிமராமத்து பணிகளை அடுத்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை


நிலுவையில் உள்ள குடிமராமத்து பணிகளை அடுத்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 13 March 2020 3:50 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குடிமராமத்து பணிகளை அடுத்த வார இறுதிக்குள் முடிக்காவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான குடிமராமத்து திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுபாசன ஏரிகள், குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி பேசியதாவது:-

கந்திலி, திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, மாதனூர் போன்ற சிறுபாசன ஏரிகளில் எல்லைகளின் நில அளவை செய்து முடிக்கப்பட்டுள்ளது. அவற்றினை தூர்வாரும் பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன. அதேபோல சிறு குளம், குட்டை பணிகள் 20 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கான செலவு கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அளவை முடியாத ஏரிகள், குளம், குட்டை போன்றவைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நில அளவர்கள் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும். குடிமராமத்து பணிகளில் எவ்வித தொய்வும் இல்லாமல் அடுத்த வாரம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், உதவி கலெக்டர் காயத்ரி, உதவி இயக்குனர்கள் (ஊராட்சி) அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நில அளவையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story