தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை; போலீசார் விசாரணை


தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 4:14 PM GMT)

குடியாத்தத்தில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை அருகே கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் இரு பகுதியிலும் சுடுகாடு உள்ளது. இப்பகுதியில் மேல்ஆலத்தூர் ரோடு செல்லும் பாதையில் உள்ள சுடுகாட்டில் ஒரு வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், தண்டபாணி, யுவராஜ், ரவி, சங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது பிணத்தின் அருகில் செருப்பு மற்றும் வாலிபரின் தலையில் போட்ட ஹாலோ பிரிக்ஸ் கல் ரத்தக்கறையுடன் கிடந்தது. மேலும் ஒரு ஆதார் அட்டை இருந்தது. அந்த ஆதார் அட்டையில் இருந்த பெயரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குடியாத்தம் கல்லூர் திருநகரை சேர்ந்தவர் அப்சர், கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மகன் சுல்தான்பா‌ஷா (வயது 23) என்பவர்தான் இறந்தவர் என்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலூரில் இருந்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிம்பா சுல்தான் பா‌ஷா இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு தங்கம் நகர் முனீஸ்வரன் கோவில் அருகே வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இறந்துபோன சுல்தான்பா‌ஷா பெங்களூருவில் சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுண்ணாம்புப்பேட்டை சுடுகாடு பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவரை எதற்காக கொலை செய்தனர், யார் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து துப்பு துலக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story