ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் காரை கடத்தியது செம்மரக்கடத்தல் கும்பலா? தனிப்படை போலீசார் விசாரணை


ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் காரை கடத்தியது செம்மரக்கடத்தல் கும்பலா? தனிப்படை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 8:11 PM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் காரை கடத்தியது செம்மரக்கடத்தல் கும்பலா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கடந்த 9-ந்தேதி ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் துப்பாக்கி முனையில் காரில் வந்தவர்களை மிரட்டி உள்ளனர். காரில் வந்த 3 பேரும் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் காரை கடத்தி சென்றார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். காரில் இருந்து தப்பி ஓடிய 3 பேரும் எந்த புகாரும் போலீஸ் நிலையத்தில் அளிக்கவில்லை. காரை செம்மரக்கடத்தல் கும்பல் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு துப்பாக்கி முனையில் காரை கடத்தியவர்கள் யார்? காரில் இருந்து தப்பிச் சென்றவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story