மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 13 March 2020 10:00 PM GMT (Updated: 13 March 2020 9:03 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம்,

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி மாவட்டம் வாரியாக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை இறுதி ெசய்வது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், சேலம் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சேலம் மாநகராட்சி, ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 139-ம், பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 139-ம், ெபாது வாக்குச்சாவடிகள்-1,139-ம் அமைக்க உத்தேசித்துள்ளோம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 1,400 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் வருகிற 18-ந் தேதிக்குள் என்ன பிரச்சினை என்பதை தெரிவிக்க வேண்டும், என்றார்.

இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் பேசும்போது, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் பல இடங்களில் நீக்கப்படாமல் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது, பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி 5-வது வார்டில் இறந்த 17 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை நீக்க வலியுறுத்தி 3 முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பெயரும் நீக்கப்படவில்லை. அதேபோல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது. அதனை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?, என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முடிவில், சேலம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் ராமன் வழங்கினார்.

Next Story