தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் போலீசாருடன் தள்ளு-முள்ளு


தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் போலீசாருடன் தள்ளு-முள்ளு
x
தினத்தந்தி 13 March 2020 11:52 PM GMT (Updated: 13 March 2020 11:52 PM GMT)

தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தங்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்திற்கு சங்க நிர்வாகி வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் பிரகதீஷ்வரன், வினோத், அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் புஸ்சி வீதி, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அங்கேயே காத்திருந்த அவர்கள் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த நேரம் ஒதுக்கி கேட்டனர். ஆனால் கவர்னர் மாளிகையில் இருந்து அவர்களுக்கு மாலை வரை நேரம் ஒதுக்கி கொடுக்கப்படவில்லை.. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று மாலை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் மாதா கோவில் வீதியில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஓடிச் சென்றனர். அவர்கள் கவர்னர் மாளிகை அருகே சென்ற உடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கவர்னர் கிரண்பெடி எங்கள் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தினை கைவிட மறுத்தனர். போராட்டத்தின்போது 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

Next Story