மாநிலங்களவை எம்.பி. தேர்தல் சிவசேனா, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு பா.ஜனதா சார்பில் பகவத் காரட் மனு தாக்கல்
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட சிவசேனா, காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். பா.ஜனதா சார்பில் பகவத் காரட் மனு தாக்கல் செய்தார்.
மும்பை,
மராட்டியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சரத்பவார், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, காங்கிரசை சேர்ந்த ஹூசேன் தால்வி, சிவசேனாவின் ராஜ்குமார் தூத், பா.ஜனதாவின் அமர் சாப்லே, பா.ஜனதா ஆதரவு சுயேச்சை சஞ்சய் காகடே, தேசியவாத காங்கிரசின் மஜீத் மேமன் ஆகிய 7 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் அடுத்த மாதம் 2-ந் தேதியுடன் முடிகிறது. எனவே புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, முன்னாள் எம்.பி. உதயன்ராஜே போஸ்லே ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று சிவசேனா சார்பில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட பிரியங்கா சதுர்வேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், பாலசாகேப் தோரட், ஆதித்ய தாக்கரே இருந்தனர். பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிவசேனாவில் இணைந்தவர் ஆவார். ஆதித்ய தாக்கரேயின் பரிந்துரையின் பேரில் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரசில் 2 பேர்
இதேபோல மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜூவ் சதாவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பவுசியா கான், பா.ஜனதா சார்பில் பகவத் காரட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவுரங்காபாத் முன்னாள் மேயரான பகவத் காரட், சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே ஆகியோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த பவுசியா கான் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. பவுசியா கான் வெற்றி பெற மகா விகாஸ்அகாடி கூட்டணியில் உள்ள பலத்தைவிட கூடுதலாக சில வாக்குகள் தேவைப்படுகிறது. இதேபோல மகா விகாஸ்அகாடி கூட்டணியில் தேசியவாத காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு 2 பேர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story