சூலூரில், போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு


சூலூரில், போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-14T05:55:42+05:30)

சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர்,

கோவையை அடுத்த சூலூரை சேர்ந்தவர் மஞ்சா (வயது 34). இவா் அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனகா (25). இந்த நிலையில் நேற்று மஞ்சா மற்றும் கனகா ஆகியோர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது கனகாவின் கையில் அரிவாள் ஒன்று இருந்தது.

மேலும் அவரது உடலில் வெட்டு காயங்கள் இருந்தன. மஞ்சாவின் சட்டை முழுவதும் கிழிந்து அவரும் காயத்துடன் வந்தார். பெண் ஒருவர் அரிவாளுடன் போலீஸ் நிலையம் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒருசிலர் அவர் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வழிவிட்டு ஒதுங்கினர். இதைத் தொடர்ந்து போலீசார் மஞ்சா மற்றும் அரிவாளுடன் வந்த கனகாவை தடுத்து நிறுத்தினர். பின்னர் கனகாவின் கையில் இருந்த அரிவாளை வாங்கிக்கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் கண்ணீர் மல்க கனகா கூறியதாவது:-

எங்களிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் முன்விரோதம் காரணமாக தகராறு செய்தார். மேலும் என்னை அரிவாளால் வெட்டினார். தட்டிக்கேட்ட எனது கணவரையும் தாக்கினார். இதையடுத்து எங்களை தாக்கியவரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கிக்கொண்டு, புகார் அளிக்க வந்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று, வெட்டு காயங்களுக்கு சிகிச்சை பெறும்படியும், அதன்பிறகு வந்து புகார் அளிக்கும்படியும் போலீசார் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். பெண் ஒருவர் போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story