நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் அனுமதி போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசோதனை


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் அனுமதி போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 15 March 2020 4:30 AM IST (Updated: 14 March 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில எல்லையில் ஊழியர்கள் முழுநேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற லாரி, பஸ், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் அடிக்கடி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் ஒருவர் அனுமதி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது ரத்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததும், அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இருப்பினும், அவரை ஒரு மாதம் தொடர்ந்து கண்காணிக்க டாக்டர்கள் முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய நெல்லை பேட்டையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால் அவரை நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை வேறு வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்து உள்ளனர். இதேபோல் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் காய்ச்சலுடன் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசோதனை 

இந்த நிலையில் நெல்லையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் நேற்று சிறப்பு மருத்துவ பரிசோதனை நடந்தது. நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் எம்.டாமோர், டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, துணை போலீஸ் கமி‌ஷனர்கள் சரவணன், மகேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஓம்பிரகாஷ் மீனா, சுகுணாசிங் உள்ளிட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை டீன் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து காய்ச்சல், சளியுடன் வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் எப்பொழுதும் கைகளை கழுவி விட்டு அடுத்த பணியை செய்ய வேண்டும். இருமல் உள்ளவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும்‘ என்றார்.

கிருமி நாசினி தெளிப்பு 

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் அனைவரும் முககவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் ஊழியர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கு வருகின்ற வாகனங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த வழியாக செல்கின்ற ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

பாளையங்கோட்டை பஸ் நிலையம், ஆஸ்பத்திரி, சினிமா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, நடராஜன் ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

Next Story