மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தொடங்குவது குறித்து கூட்டம்; எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தொடங்குவது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதிதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கி அதை பதிவு செய்வது தொடர்பான பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி பேசினார். முகம்மதுஜான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் (சோளிங்கர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கி அதை பதிவு செய்வது எனவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தலைவராக கலெக்டர், செயலாளராக திட்ட இயக்குனர், உறுப்பினர்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிலை அதிகாரிகள் ஆகியோரை நியமித்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவராம்குமார், ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயராஜ், மாவட்ட தொழில் அலுவலர் ரவி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பேபிஇந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் உள்பட பல்வேறு அரசு துறைகளின் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story