ஆதம்பாக்கத்தில் தொழில் உரிமம் பெறாத 10 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


ஆதம்பாக்கத்தில்   தொழில் உரிமம் பெறாத 10 கடைகளுக்கு ‘சீல்’   அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2020 4:00 AM IST (Updated: 14 March 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஆதம்பாக்கத்தில் தொழில் உரிமம் பெறாத 10 கடைகளுக்கு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியில் தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு, சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் உரிமம் பெறாத 20 கடைகளுக்கு ‘சீல்’ வைக்க ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் முருகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆலந்தூர் வருவாய் உதவி அலுவலர் யுகமணி தலைமையில் வருவாய் அதிகாரிகள் பாஸ்கர், ரகமத்துல்லா, இருதயராஜ் மற்றும் ஊழியர்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள உரிமம் பெறாத 10 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.

வியாபாரிகள் முற்றுகை

மேலும் சில கடைகளுக்கு ‘சீல்’ வைக்க சென்றபோது, ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், தி.மு.க. வட்டசெயலாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் தி.மு.க.வினர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தொழில் உரிமம் பெற தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கேட்டனர்.

அதற்கு அதிகாரிகள், “தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. உரிமம் பெற முறையான விண்ணப்பங்களை தந்து உரிமம் பெற்றால் ‘சீல்’ அகற்றப்படும்” என்றனர்.

ஒரு நாள் அவகாசம்

இதுபற்றி ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசனுக்கு தகவல் தந்தனர். உரிமம் பெற ஒருநாள் கால அவகாசம் தந்தால் வியாபாரிகள் பெற்றுக்கொள்வார்கள் என்று மண்டல உதவி கமிஷனரிடம் தா.மோ.அன்பரசன் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து கடைகளுக்கு ‘சீல்’ வைப்பதை அதிகாரிகள் கைவிட்டனர். ‘சீல்’ வைத்த கடைக்காரர்கள், உரிமத்தை பெற்றுக்கொண்டதும் ‘சீல்’ அகற்றப்படும். உரிமம் பெறாமல் உள்ள கடைகள் உடனே உரிமம் பெற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதனால் ஆதம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story