தீயில் கருகி முதியவர் பலி கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வைத்த கொசுவர்த்தி சுருளே உயிரை பறித்தது


தீயில் கருகி முதியவர் பலி கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வைத்த கொசுவர்த்தி சுருளே உயிரை பறித்தது
x
தினத்தந்தி 15 March 2020 5:30 AM IST (Updated: 15 March 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே வீட்டில் தூங்கிய முதியவர் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி சுருள் வைத்து இருந்தார். அதில் இருந்து தீப்பொறி துணியில் பிடித்து எரிந்ததில் முதியவர் உடல் கருகி பலியானார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளம்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பக்கிரிசாமி(வயது 82). இவரது மனைவி நவநீதம்(65). இவர்களது மகன் ஸ்டாலின்(43). இவரது மனைவி ராஜேஸ்வரி(34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பக்கிரிசாமி நேற்று முன்தினம் வீட்டு வாசலில் உள்ள கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தார். மற்றவர்கள் அனைவரும் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு உள்ளே தூங்கிக்கொண்டு இருந்தனர்.

தீயில் கருகி பலி

பக்கிரிசாமி தூங்கிக்கொண்டிருந்த இடத்தின் அருகில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாத குளிர்சாதன பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டியை வீட்டில் இருந்தவர்கள் அலமாரியாக பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் பழைய துணிகள் இருந்தது.

அன்று இரவு பக்கிரிசாமி கொசு கடிக்காமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படாத குளிர்சாதன பெட்டி மேல் கொசுவர்த்தியை கொழுத்தி வைத்துள்ளார். அப்போது கொசுவர்த்தியின் தீப்பொறி அருகில் இருந்த பழைய துணியில் பிடித்து எரிந்தது. பின்னர் தீ பரவி அருகே தூங்கிக்கொண்டிருந்த பக்கிரிசாமி மீதும் பிடித்து எரிந்தது. இதில் அந்த இடத்திலேயே பக்கிரிசாமி உடல் கருகி பலியானார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து நன்னிலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பக்கிரிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story