கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலுக்கு முககவசம் அணிந்து வந்த வெளிநாட்டு பயணிகள்


கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலுக்கு முககவசம் அணிந்து வந்த வெளிநாட்டு பயணிகள்
x
தினத்தந்தி 15 March 2020 12:00 AM GMT (Updated: 14 March 2020 7:25 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் தஞ்சை பெரிய கோவிலுக்கு முககவசம் அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. பெரியகோவில் குடமுழுக்கு கடந்த மாதம் 5-ந் தேதி நடந்தது.

முககவசம் அணிந்து வந்த வெளிநாட்டு பயணிகள்

அதன்பிறகு கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணி களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே ஒருவித அச்சத்தில் உள்ளது. இதனால் பிறரிடம் இருந்து கொரோனா வைரஸ் தங்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முககவசத்துடன் வலம் வந்தனர்.

மருத்துவ முகாம்

கூட்டம் அதிகமாக வரக்கூடிய இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஏராளமானோர் பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட இடத்தில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story