திருநள்ளாறு குளத்தில் குளிக்க தடை தலையில் தண்ணீர் தெளித்து சென்ற பக்தர்கள்


திருநள்ளாறு குளத்தில் குளிக்க தடை தலையில் தண்ணீர் தெளித்து சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 15 March 2020 5:00 AM IST (Updated: 15 March 2020 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு சனிபகவான் கோவில் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் தலையில் தண்ணீர் தெளித்து சென்றனர்.

காரைக்கால்,

கொரோனா வைரஸ் காரைக்காலில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமி திருநள்ளாறு சனிபகவான் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்தார். இதை கோவில் நிர்வாகம் உடனே அமலுக்கு கொண்டு வந்தது.

நேற்று சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை வந்தனர். போலீசார் குளத்தில் குளிக்கவேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் பக்தர்கள் தண்ணீரை தலையில் தெளித்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் பாட்டிலில் குளத்தின் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிகொண்டனர்.

கை கழுவ சோப்

பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக கோவில் உள்ளே நுழையும் வரிசையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சோப்பால் கைகளை கழுவிவிட்டு பின்னர் கோவிலுக்குள் சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருநள்ளாறு சனிபகவான் கோவில் குளத்தில் இருந்து பக்தர்கள் குளிக் காமல் இருக்க தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

சளி, இருமல் உள்ளவர்கள் வரவேண்டாம்

கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் மூலம் குளத்தில் குளிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை முதல் குளத்தில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் தலையில் தண்ணீர் தெளித்துகொள்ள மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனை செய்யும் அவசியம் தற்போது இல்லை. அதனால், பக்தர்களும் எந்தவித அச்சமும் இன்றி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்லலாம். சளி, இருமல் உள்ள பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டுகிறோம்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

Next Story