குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக லால்பேட்டையில் கடைகள் அடைப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக லால்பேட்டையில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 14 March 2020 10:15 PM GMT (Updated: 14 March 2020 7:39 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, லால்பேட்டையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் லால்பேட்டையில் உள்ள முஸ்லிம் ஜமாத் அமைப்பினர், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக சட்டசபை கூட்ட தொடரில் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 23-வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில் தங்களது போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் 14-ந் தேதி (அதாவது நேற்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் ஜமாத் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று லால்பேட்டையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அந் தப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் லால்பேட்டையை சுற்றி அமைந்துள்ள எள்ளேரி, ஆயங்குடி, கொள்ளுமேடு, மானியம், ஆடூர் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் லால்பேட்டையில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையும் நேற்று நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Next Story