பாரம்பரிய உணவு பற்றிய வாகன பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


பாரம்பரிய உணவு பற்றிய வாகன பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 March 2020 4:30 AM IST (Updated: 15 March 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய உணவு பற்றிய வாகன பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் பாரிவள்ளல் நகராட்சி பள்ளி வளாகத்தில் சத்தான ஆரோக்கியமான பாரம்பரிய உணவை உண்பதன் அவசியத்தை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க விழா நடைபெற்றது. பிரசாரத்தை தொடங்கி வைத்த கலெக்டர் வீரராகவராவ் பாரம்பரிய உணவு கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்பு அதனை காட்சிபடுத்தியவர்களுக்கு பரிசு வழங்கி அவர் பேசியதாவது:- மனிதனின் நீண்ட நோயில்லா வாழ்விற்கு சத்தான உணவு என்பது அவசியம். மத்திய,மாநில அரசுகள் குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஆகியோருக்கு சத்தான உணவை வழங்குவதிலும், சுகாதாரத்தை காப்பதிலும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன.

பாரம்பரிய காய்கறி உணவுகளில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. சுகாதாரத்தை பேணுவதற்கு நாம் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து வகை தொற்று நோய்களையும் தடுக்க கை கழுவுவது அவசியம்.

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரத்திற்கு 221 பேர் திரும்பி வந்துள்ளனர். அவர்கள் 14 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பின்பு ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 190 பேர் வீடுகளில் இருந்தவாறே 40 நாட்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மேலும் 10 அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளர்ச்சி திட்ட அதிகாரி ஜெயந்தி, வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story