திண்டுக்கல் வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


திண்டுக்கல் வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 14 March 2020 10:23 PM (Updated: 14 March 2020 10:23 PM)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொடைரோடு,

புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் திண்டுக்கல் நோக்கி வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்படி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோட்டை அடுத்த பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு அருகே முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், முன்னாள் எம்.பி. உதயகுமார், தேன்மொழிசேகர் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் மேள, தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கலெக்டர் விஜயலட்சுமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் சார்பில், அதன் நிர்வாகிகள் முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி முதல்-அமைச்சரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலையில் இருந்து காத்திருக்கிற உங்களது க‌‌ஷ்டங்களை இந்த அரசு நீக்கி விடும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் அதனை நிறைவேற்றி தரக்கூடிய அரசு எங்களது அரசு தான். ஏழை-எளிய மக்களுக்கு ஜெயலலிதாவின் அரசு உதவியாக இருக்கும்.

அ.தி.மு.க. அரசும், கட்சியும் ஏழைகளின் பக்கம் தான் உள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை நமது அரசு செய்து வருகிறது. ஏழைகள் வாழ வேண்டும் என முன்னாள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களையும் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரு மடிக்கணினியின் விலை ரூ.12 ஆயிரம் ஆகும். அதனை விலையில்லாமல் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்குகிறோம். இந்தியாவிலேயே கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி நிதி ஓதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்த திட்டங்களின் மூலம் கிராமப்புறத்தில் வசிக்கிற ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகளும் வசதி படைத்தவர்களுக்கு இணையாக உயர் கல்வி கற்க முடியும். அவர்கள் டாக்டராகவும், பொறியாளராகவும் ஆக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் ரெஜினாநாயகம், பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன், துணைத்துலைவர் சதீ‌‌ஷ்குமார், குல்லலக்குண்டு ஊராட்சி தலைவர் யசோதை, துணைத்தலைவர் காளிமுத்து, சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, துணை தலைவர் சங்கீதா, அ.தி.மு.க. நிர்வாகிகள் சங்கையா, குணசேகரன், செந்தில்குமார், ஜான்கென்னடி, சேசுராஜ், தவமணி, காட்ராஜா, மோகன்ராஜ், ஜெயசீலன், நரியூத்து ஊராட்சி தலைவர் செல்வம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு, ஊராட்சி செயலர்கள் பொன்னுச்சாமி, கணேசன், முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் (குல்லிசெட்டிபட்டி) வைகை பாலன், (நூத்துலாபுரம்) செல்வராஜ், (கோடாங்கிநாயக்கன்பட்டி) பாண்டி, (எத்திலோடு) ராஜலட்சுமி திருப்பதி, (பிள்ளையார்நத்தம்) முனிராஜா, (சிவஞானபுரம்) பாப்பாத்தி அம்மாள், (சித்தர்கள் நத்தம்) முத்துலட்சுமி முத்தையா, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை, பூங்கொத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஏ.வெள்ளோடு பிரிவு அருகே ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன் தலைமையில் அந்த கட்சியினர் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கோபி, மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து ஏ.வெள்ளோடு வந்த முதல்-அமைச்சருக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, துணைத்தலைவர் ‌ஷாலினி, ஊராட்சி செயலர் கிளாரா ஜெனிபர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும்போது, எம்.ஜி.ஆர். நின்று பேசிய இடத்தில் நான் பேசுவதை நினைத்து பெருமை அடைகிறேன்.

இது, விவசாயிகள் வாழும் கிராமம். விவசாயி தான் இன்றைய கடவுள். நாம் சேற்றில் கால் வைக்காவிட்டால் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியாது. விவசாயிகளுக்கு நன்மை தரும் எந்த திட்டங்களாக இருந்தாலும், அதனை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ முதல்-அமைச்சரிடம் கொடுத்த மனுவில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லும் வைகை அணையின் கால்வாயில் இருந்து சிறுமலை அடிவாரத்தில் புதிய கால்வாய் அமைத்து கொடைரோடு, வெள்ளோடு வழியாக மணப்பாறை வரை இணைக்க வேண்டும். ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆங்காங்கே உள்ள குளங்களில் தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் பொதுமக்கள் சார்பில் ராஜேந்திரன் என்பவர் முதல்-அமைச்சரிடம் கொடுத்த மனுவில், 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத சிறுமலை அடிவாரத்தில் உள்ள ராமாக்காள் அணையை தூர்வார வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மதுரையில் இருந்து திண்டுக்கல் வரும் வழிநெடுகிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க பொதுமக்கள் திரண்டிருந்தனர். ஆங்காங்கே சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைகளை கூப்பி வணங்கியபடி சென்றார்.

Next Story