‘கொரோனா’ முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு


‘கொரோனா’ முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 14 March 2020 11:30 PM GMT (Updated: 14 March 2020 10:43 PM GMT)

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு,

உலகம் முழுவதையும் கொரோனா ைவரஸ் பாதிப்பு கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து புறப்படும் அரசு பஸ்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கிரிமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணிமனையில் இருந்து சென்று வந்த அனைத்து பஸ்களின் இருக்கைகள், சக்கரங்கள் மற்றும் பஸ்சின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பெண்ஊழியர்கள் உள்பட போக்குவரதுக்கழக பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

850 பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், ஈரோடு மண்டல பொதுமேலாளர் சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 850 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள், மைசூர், பெங்களூர் ஆகிய பெரு நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்யும் நிலையில் யாருக்கும் கொரோனா உள்ளிட்ட வைரஸ்களால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசின் உத்தரவின்படியும், சுகாதாரத்துறை ஆலோசனையின் பேரிலும் இந்த கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஈரோடு மட்டுமின்றி பள்ளிபாளையம், கரூர், சத்தியமங்கலம்,பெருந்துறை, கோபி, தாளவாடி உள்ளிட்ட அனைத்து பணிமனைகளிலும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மறு அறிவிப்பு வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story