போன்மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் கவர்னர் மாளிகை தகவல்


போன்மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் கவர்னர் மாளிகை தகவல்
x
தினத்தந்தி 15 March 2020 5:53 AM IST (Updated: 15 March 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் போன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வாராந்திர ஆய்வுப் பணியாக நேற்று சாலை போக்குவரத்து, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். காமராஜர் சாலை, 100 அடி ரோடு, மரப்பாலம், உப்பளம் அம்பேத்கர் சாலை பகுதிகளில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது சாலைகளில் உள்ள தடுப்புகளை அகற்றுவது, சிக்னல்கள் அமைப்பது, சாலையோரம் தேங்கிக்கிடக்கும் மணலை அகற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கு வருமாறு அமைச்சர் நமச்சிவாயத்துக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர் தனது ஆதரவினை தெரிவிப்பதாக செய்தி அனுப்பியிருந்தார்.

இந்த ஆய்வின்போது அரசு செயலாளர்கள் சுர்பிர் சிங், சுந்தரேசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சிவக்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மாற்று ஏற்பாடு

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கவர்னர் மாளிகையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடுமாறு கூறப்பட்டது.

இந்தநிலையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் விதமாக கவர்னர் மாளிகை மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

ஒலிப்பதிவு

அதாவது வழக்கமாக மக்கள் சந்திப்பு நடக்கும் நேரமான மாலை 5 மணிமுதல் 7 மணிவரை போன் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். போன் செய்பவர்கள் தங்களை அறிமுகப்படுத்திய பின் புகார்களை தெரிவிக்கவேண்டும்.

அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பதிவு செய்யப்பட்ட ஒலியுடன் கூடிய புகார்களும் அனுப்பப்படும். இந்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

டெலிபோன் எண்கள்

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு கவர்னர் மாளிகை உதவுகிறது. தங்கள் குறைகளை திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் 7 மணிவரை 2224499, 2225390, 2334050 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

Next Story