கூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்பதாக புகார்: பெங்களூருவில் 210 மருந்து கடைகளில் போலீஸ் அதிரடி சோதனை 5 கடைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை


கூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்பதாக புகார்: பெங்களூருவில் 210 மருந்து கடைகளில் போலீஸ் அதிரடி சோதனை 5 கடைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
x
தினத்தந்தி 15 March 2020 12:38 AM GMT (Updated: 15 March 2020 12:38 AM GMT)

பெங்களூருவில் 210 மருந்து கடைகளில் போலீஸ் அதிரடி சோதனை 5 கடைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் பெங்களூருவில் பொதுமக்கள் முகக்கவசத்தை வாங்கி அணிந்து வருகிறார்கள். இதனால் முகக்கவசத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதன் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மருந்து கடைகளில் முகக்கவசங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதைதொடர்ந்து நேற்று மதியம் பெங்களூருவில் உள்ள மருந்து கடைகளில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கலாசிபாளையம், சாம்ராஜ்பேட்டை, ஜெயநகர், மகாலட்சுமி லே-அவுட், சஞ்சய்நகர் பகுதிகளில் மொத்தம் 210 மருந்து கடைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 5 மருந்து கடைகளில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறைக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர். இதற்கிடையே துமகூரு மாவட்டம் திப்தூர் டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் கூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அந்த மருந்து கடையின் உரிமையாளரை திப்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story