பட்டு வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


பட்டு வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 15 March 2020 1:41 PM GMT)

பட்டு வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி, 

பட்டு வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம் 

தென்காசியில் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் சைமன் அருள்ஜீவராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரசிங் சங்கத்தின் வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் நடராஜன் சங்கத்தின் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, சமூகநலத் துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சு.துரைசிங், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணை தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் துணை தலைவருமான அருணாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தீர்மானம் 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பட்டு வளர்ச்சித்துறையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் உள்ள தமிழ்நாடு சட்டமன்ற விதி எண் 110–ன் கீழ் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊழியர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் இளநிலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பட்டு வளர்ச்சித்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்டு ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் ஓய்வுபெற்ற உயர் அலுவலர்களை மீண்டும் பணி நியமனம் செய்வதை தவிர்த்து பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பட்டு பண்ணைகள் உள்ளிட்ட அலகுகளில் உரிய கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20–ந் தேதி அன்று நிகரி இயக்கம் நடத்துவது என்றும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 27–ந்தேதி பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை சங்கத்தின் மாநில துணை தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Next Story