பறவை காய்ச்சல்– கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் புளியரை சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு


பறவை காய்ச்சல்– கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் புளியரை சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 2:20 PM GMT)

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோட்டை, 

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் 

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பறவை காய்ச்சலால் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தது. அதனை தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்க தமிழகம்– கேரள எல்லையான செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் சுகாதாரப்பணிகள் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் நேற்று புளியரை சோதனைச்சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அதன் பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

டிரைவர்களுக்கு எச்சரிக்கை 

மேலும் கோழி கழிவுகள், உயிருடன் வாகனங்களில் ஏற்றி வரும் வாத்துகள், கோழிகள் மற்றும் முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டு மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி டிரைவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன் முகாமிற்கு சென்று சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். சுகாதாரத் துறை சார்பில் கொரோனா வைரஸ் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன் அறிவுரையின்பேரில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி தலைமையில் வடகரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், வெங்கடேசன், ராஜேந்திரன் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கேரளாவில் இருந்து வாகனங்களை நிறுத்தி துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் சுகாதார பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

Next Story