ஆலந்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் பஸ் நிறுத்தம், தானியங்கி படிக்கட்டுகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்


ஆலந்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் பஸ் நிறுத்தம், தானியங்கி படிக்கட்டுகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்
x
தினத்தந்தி 16 March 2020 4:00 AM IST (Updated: 15 March 2020 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், தானியங்கி படிக்கட்டு உள்ளிட்டவைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்.

ஆலந்தூர்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளும், ஐ.நா. சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அரசும் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர சுற்றுலா விசாவை நிறுத்தி வைத்து உள்ளது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவின்பேரில் ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலைய வாசல், பஸ் நிறுத்தம், லிப்ட், தானியங்கி படிக்கட்டுகள், ஏ.டி.எம். மையங்கள், கோவில்கள், மசூதி, தேவாலயங்கள், சினிமா தியேட்டர்கள், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரி என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் கைகள் வைத்து செல்லும் இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி மூலம் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மண்டல உதவி கமிஷனர் முருகன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

Next Story