சீர்காழி அருகே தண்டவாளத்தில் உடைப்பு செந்தூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது


சீர்காழி அருகே தண்டவாளத்தில் உடைப்பு செந்தூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
x
தினத்தந்தி 16 March 2020 12:30 AM GMT (Updated: 15 March 2020 5:19 PM GMT)

சீர்காழி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சீர்காழி, 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து 5.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் வழியாக விழுப்புரத்தை 9.10 மணிக்கு அடைகிறது. இதைப்போல விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் 6.50 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது. மயிலாடுதுறை- விழுப்புரம் மார்க்கமாக தினமும் மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

உடைப்பு

நேற்று காலை 5.40 மணிக்கு வழக்கம் போல மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. 6.15 மணி அளவில் சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி ரெயில்வே கேட்டை கடந்து ரெயில் சென்ற போது தண்டவாளத்தில் இருந்து வினோதமாக சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் உடனே இது குறித்து சீர்காழி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி பகுதியில் ரெயில் தண்டவாளத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் பாதரக்குடி பகுதியில் தண்டவாளத்தில் சுமார் 1 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தாமதம்

உடனே இது குறித்து ரெயில்வே பொறியாளர்கள் சீர்காழி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வர வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சீர்காழி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்க கூறினர். இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் சீர்காழி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் சுமார் 1 மணி நேரம் வெல்டிங் பணிகள் நடைபெற்று தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதன்பின் செந்தூர் எக்ஸ்பிரஸ் சீர்காழி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு சென்றது. இதைப்போல இந்த வழியாக செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலும் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு திருப்பதிக்கு சென்றது.

Next Story