திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதல்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு மற்றும் சட்டங்களைப் பற்றி விளக்கி கூறும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தரும் நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் பெண்களின் தற்காப்புக்காக திட்டம் வடிவமைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் மனவலிமையை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுயபாதுகாப்பு பயிற்சியின் மூலம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அனைத்தையும் தடுக்கும் வகையிலும் அதை சமாளிக்கும் வகையிலும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் தகுதி உள்ளவர்களாக மாறுவார்கள்.
சாலையில் தனியாக செல்லும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்ற சம்பவங்கள் மற்றும் குடும்ப வன்முறை போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து போராடுவதற்கான எளிய பாதுகாப்பு நுட்பங்கள் கொண்ட பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும், பெண்கள் தங்களுடைய மன வலிமையை அதிகரித்துக் கொள்ளவும் இந்த பயிற்சி உதவும். தற்காப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்குழுவுடன் மாவட்ட காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அல்லது வாரத்தில் ஒரு நாள் மாணவிகளுக்கு உகந்த நாட்களில் கல்லூரிகளுக்கு சென்று அல்லது ஏதாவது ஒரு இடத்தில் அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.
கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஒருவரும் காவல்துறை சார்பில் ஒருவரும் பங்கேற்று ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயிற்சி 12 வகுப்புகள் கொண்டதாகவும் 3 மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் 1½ மணி நேரம் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படும்.
10 நிமிட இடைவெளியின்போது பெண் போலீசார் காவல்துறை பற்றியும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை அறிந்து கொள்ளவும் அவர்கள் காவல் நிலையத்தை அணுகி எவ்வாறு புகார் அளிப்பது பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வதற்கு என்ன தண்டனை சட்டங்களை பற்றியும் விளக்கிக்கூற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, இன்ஸ்பெக்டர்கள் பேபி, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story