அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 வாலிபர்கள் கைது


அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 15 March 2020 7:37 PM GMT)

அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கீரனூர்,

கீரனூர் அருகே உள்ள காரப்பட்டையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (வயது 70). இவரையும், இவரது மகன் முத்து ஆகிய 2 பேரையும் நமணராயசத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி (51) தரப்பை சேர்ந்தவர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் மூர்த்தி கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி களமாவூர் பகுதியில் உள்ள டீக்கடையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் மூர்த்தியை வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிள்ளனூரை சேர்ந்த பாக்கியராஜ், வீராச்சாமி மகன் மாரிமுத்து, உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த், கூலிப்படையை சேர்ந்த மதுரை கொட்டக்கூடி பழனிக்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த பிரபு, திடீர்நகரை சேர்ந்த அருள்முருகன், திருச்சி சமயநல்லூர் கண்ணன், ஜெயந்திபுரம் ராஜா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஆறுமுகம், வானாமாமலை, திம்மராஜபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி, பாளையங்கோட்டையை சேர்ந்த உடையார், சிவகங்கையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் 4 வாலிபர்கள் கைது

இதில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. இதையடுத்து 17 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூலிப்படையை சேர்ந்த கரூர் மாவட்டம், வேலாயுதபாளையம் விக்னேஷ் (23), பரமத்தி வேலூர் சங்கர் (21), சூர்யா (23), கரூர் கோபி (21) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கீரனூர் குற்றவியல் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story