மாவட்ட செய்திகள்

ஏர்வாடி மீனவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வாரணாசியில் தற்கொலை - தங்கம் கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு திருப்பங்கள் + "||" + Suicide in Varanasi is the main culprit involved in the killing of Airwadi fisherman

ஏர்வாடி மீனவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வாரணாசியில் தற்கொலை - தங்கம் கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு திருப்பங்கள்

ஏர்வாடி மீனவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வாரணாசியில் தற்கொலை - தங்கம் கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு திருப்பங்கள்
ஏர்வாடி பகுதியை சேர்ந்த மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கோடாங்கி ராமநாதன் என்பவர் வாரணாசியில் தற்கொலை செய்து கொண்டார். தங்கம் கடத்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியை சேர்ந்தவர் மீனவர் குமார்(வயது 45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏந்தல் பகுதியில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் வாலாந்தரவையை சேர்ந்த மாசி மகேந்திரன், காட்டூரணி இருளேஷ் என்ற ராஜேஷ், மொட்டையன்வலசை பொன்.சுகில்ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தினை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் கடத்தல் கும்பல் பங்கு போட்டு பிரித்து கொண்டது. இந்த தங்கத்தின் ஒரு பகுதியை நகைகளாக மாற்றியும், பணமாக மாற்றியும் காரில் கொண்டு வந்தபோது மண்டபம் அருகே சுந்தரமுடையான் பூவன் குடியிருப்பு பகுதியில் போலீசார் மடக்கி 185 பவுன் நகைகள், ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரஞ்சித், விஜய், காளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்ட நகைகள் மற்றும் பணம் போக மீதம் உள்ள 2 கிலோ தங்கம் என்ன ஆனது, யார் வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாமலே இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போதைய விசாரணையில்தான் அதற்கு விடை கிடைத்துள்ளது. கடத்தல் தங்கத்தில் தங்கச்சிமடத்தை சேர்ந்த உதயகோபி என்ற கோபி என்பவர் மட்டும் தனக்கு கிடைத்த பங்கான 2 கிலோ தங்கத்தினை தனது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா வெட்டன்மனை தெருவை சேர்ந்த கோடாங்கி ராமநாதன்(43) என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளார்.

இந்த தங்கத்தினை ராமநாதன் தான் நிர்வகித்து வரும் கோவிலில் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தேடுதல் வேட்டை குறைந்ததும் தங்கத்தினை கொலை செய்யப்பட்ட உறவினரான மீனவர் குமாரிடம் கொடுத்து போலீசாருக்கு சந்தேகம் வராதவாறு உருக்கி நகையாக செய்து தருமாறு கூறியுள்ளார்.

ஆனால் குமார் அதனை உருக்கி நகையாக செய்து அதில் 130 பவுன் நகையை மட்டும் ராமநாதனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுத்த தங்கத்தில் அந்தளவிற்குதான் நகை செய்ய முடிந்ததாக குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் குமார் தன்னை ஏமாற்றுவதாக எண்ணிய ராமநாதன் அவரிடம் மீதம் உள்ள தங்கத்தை எப்படி வாங்குவது என்று யோசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி இருளேஷ் என்பவர் கார் ஓட்டும் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதாக நண்பரான உதயகோபியிடம் கூறியுள்ளார். இதனால் அவரை உதயகோபி ஏர்வாடிக்கு அழைத்து சென்று கோடாங்கி ராமநாதனிடம் கூறி மாந்திரீகம் செய்து பரிகாரம் தேடி கொடுத்துள்ளார். அதன் பின்னர் தான் உதயகோபி, இருளேஷிடம் தங்கத்தை குமார் ஏமாற்றியதை ராமநாதன் தெரிவித்துள்ளார்.

குமாரை மிரட்டி தங்கத்தை திரும்ப வாங்கி கொடுத்தால் நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதன்பின்னரே குமாரை வரவழைத்து மிரட்ட திட்டமிட்டு களத்தில் இறங்கி உள்ளனர். இதன்படி குமாரை காரில் கடத்தி ஏந்தல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து குமாரிடம் தங்கம் குறித்து கேட்டபோது அவர் தன்னிடம் இல்லை என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து குமாரை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரின் கைகள், கால்கள், தலை, உடல்களை வெட்டி எரித்து புதைத்து விட்டனர். இந்த கொலையில் ராமநாதன் உள்பட 18 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான ராமநாதன் பிடிபட்டால்தான் முழு விவரங்களும் தெரியவரும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடிவந்தனர். போலீசார் தன்னை மோப்பம் பிடித்துவிட்டதை உணர்ந்த அவர் வெளியூர் தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது கோடாங்கி ராமநாதன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அங்குள்ள போலீசார் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோடாங்கி ராமநாதன் சிக்கினால்தான் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக ஏர்வாடி மீனவர் குமார் கொலை வழக்கில் மீதம் உள்ளவர்களின் பங்கு என்ன? குமார் வைத்திருந்த தங்கம் யாரிடம் உள்ளது, கோடாங்கி ராமநாதன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.

மீனவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கோடாங்கி ராமநாதன் குறி சொல்வது, குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவது, தொழில்விருத்தி ஏற்படுத்தி தருவதாக கூறி பல ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், அதில் பல முக்கிய தகவல்களும், பலர் குறித்த விபரங்களும் கிடைத்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிளஸ்-2 மாணவி தற்கொலை இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் விபரீத முடிவு
குழித்துறை அருகே இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. கடிதம் எழுதி வைத்துவிட்டு வனக்காவலர் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது
சாக்கோட்டை அருகே வனக்காவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
3. கடன் தொல்லையால் விபரீதம்: ஓட்டல் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
கடன் தொல்லையால் விபரீதமாக ஓட்டல் தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
4. பாலக்கோட்டில் மர வியாபாரி தீக்குளித்து தற்கொலை
பாலக்கோட்டில் குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோலை ஊற்றி மர வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: ஆதாரங்களை அழித்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்
திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் ஆதாரங்களை அழித்த போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 போலீசாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை ரவிக்குமார் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து உள்ளார்.