குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விழா மேடையில் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிய பெண்ணால் பரபரப்பு


குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விழா மேடையில் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிய பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 15 March 2020 8:05 PM GMT)

விருதுநகரில் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விழா மேடையிலேயே அமைச்சர்களிடம் பெண் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் அருகில் கூட்டுறவுத்துறையின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா நடந்தது.

பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகிேயார் பயனாளிகளுக்கு கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நலத்திட்ட உதவி பெற வந்த நிலோபர் பாத்திமா என்ற பெண், விழா மேடையிலேயே திடீரென அமைச்சர்களிடம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் சட்டம் நிறைவேற வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் என்று கூறினார்.

அதற்கு குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த பாதிப்பும் வராது. என்.பி.ஆர். கணக்கெடுப்பில் 3 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுவரை தமிழகத்தில் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். நீங்கள் கவலைப்பட தேவையில்லை என அமைச்சர்கள் விளக்கம் அளித்து அந்த பெண்ணுக்கு நலத்திட்ட உதவியை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story