மடத்துக்குளம் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
மடத்துக்குளம் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் பகுதியில் இருந்து வரும், உடுமலைப்பேட்டை பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் பாப்பான்குளம், சாமராயபட்டி ஆகிய பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள உடுமலை பி.ஏ.பி. வாய்க்காலில் முதல் மண்டல பாசனத்தில், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு பாய்ந்து வருகிறது.
முதல் சுற்றில் கடை மடை வரை தண்ணீர் வந்தது. ஆனால் தற்போது வரும் இரண்டாம் சுற்றில் வரும் தண்ணீர், கடைமடை வரும் போது தண்ணீர் மிகவும் குறைவாகவே வருகிறது. மேலும் கடைமடைக்கு தண்ணீர் அதிகளவில் வருவதில்லை என புகார் எழுந்தது.
இந்த நிலையில் கடைமடை வரை சீராக தண்ணீர் விடக்கோரி மடத்துக்குளம் அருகே உடுமலை-குமரலிங்கம் சாலையில் உள்ள பாப்பான்குளம் பிரிவு எனும் இடத்தில் அப்பகுதி விவசாயிகள் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முதல் சுற்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது கடைமடை வரை தண்ணீர் வந்தது. அப்படி வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். ஆனால் தற்போது 2-ம் சுற்றுக்கான தண்ணீர் கடைமடை வரை போதுமானதாக வரவில்லை. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, எங்கள் நிலங்கள் தண்ணீர் கிடைக்காமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட எங்களது கடைமடை பகுதி வரை அதிக அளவில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு குமரலிங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோஷிலின் அந்தோணியம்மாள் தலைமையில் வந்த போலீசார் அங்கு சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களது சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story