மணப்பாறை, லால்குடியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு


மணப்பாறை, லால்குடியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 March 2020 10:45 PM GMT (Updated: 15 March 2020 8:09 PM GMT)

மணப்பாறை, லால்குடியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மணப்பாறை,

மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் காமராஜர் சிலையில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இதையடுத்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு போக்குவரத்து போலீசார் மற்றும் அரசு டாக்டர் ரிஷ்வானா தலைமையில் மருத்துவ பணியாளர்கள் சேர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். மேலும் பொதுமக்களுக்கும் முக கவசம் வழங்கினர். கொரோனா வைரஸ் இல்லாத நிலையை உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு முகாம்

இதேபோல் லால்குடியை அடுத்த குமுளூரில் உள்ள வேளாண்மை பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் விதம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை கல்வி நிறுவன மாணவ மன்ற ஆலோசகர் சண்முகம் வரவேற்றார். முகாமில் புள்ளம்பாடி அரசு டாக்டர் ஆல்வின் ஜியோ கலந்து கொண்டு கொரோனா வைரஸ் குறித்தும், பரவும் முறைகளை பற்றியும், தடுக்கும் முறைகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். வேளாண்மை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அண்ணாதுரை கொரோனா வைரஸ் தோன்றிய விதம் பற்றியும், அதில் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார். இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் மற்றும் வேளாண்மை பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் நடந்தது. முதல்வர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் குழுவினர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி மாணவர்கள் மூலம் 89 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது. மாவட்ட ரத்த மாற்ற அதிகாரி டாக்டர் புவனேசுவரி, கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினார். முகாம்களில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி அஹமத் ஜீலானிபாஷா செய்திருந்தார்.

Next Story