கொரோனா வைரஸ் பீதி: வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது


கொரோனா வைரஸ் பீதி: வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 15 March 2020 9:01 PM GMT)

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது.

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகளை சுற்றி பார்த்து ரசிப்பது வழக்கம். மேலும் விடுமுறை தினங்களில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேற்று வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் வழங்கும் இடம், பொதுமக்கள் அதிகமாக ரசித்து பார்க்கும் வெள்ளைப்புலி, சிங்கம், சிறுத்தை, யானை, நீர்யானை, காண்டாமிருகம், மனிதகுரங்கு உள்பட முக்கிய விலங்குகள் உள்ள இரும்பு கூண்டு, பொதுமக்கள் கை வைக்கும் இரும்பு தடுப்புகள், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், உள்பட பல்வேறு இடங்களில் எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பூங்கா அதிகாரிகள் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பூங்காவை சுற்றி பார்க்க செல்லும் பேட்டரி வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. டிக்கெட் வாங்கிக்கொண்டு பூங்காவுக்கு பொதுமக்கள் நுழைவும் இடத்தில் தரைப்பகுதியில் கோணிப்பை போட்டு அதில் கிருமி நாசினி ஊற்றப்பட்டிருந்தது.

கிருமி நாசினி ஊற்றப்பட்ட கோணிப்பையை பூங்காவுக்கு நுழையும் பார்வையாளர்கள் காலால் மிதித்த பிறகு தான் பூங்காவுக்கு நுழைய வேண்டும், மேலும் பூங்காவில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கையில் கையுறை அணிந்தும் பணியாற்றினர். பூங்காவுக்கு வரும் ஒரு சில பார்வையாளர்களும் முக கவசம் அணிந்து பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர்.

இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவிதமான நோய் தொற்றுக்கள் ஏற்படாதவாறு நேற்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பூங்காவில் உள்ள நுழைவு சீட்டு வழங்குமிடம், டிக்கெட் பரிசோதனை செய்யும் இடம், பொதுமக்கள் கொண்டு வரும் பொருட்கள் வைக்கும் இடம் உள்பட பூங்காவில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது. பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடம் இருந்து பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக பூங்கா ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கையில் கையுறை அணிந்து நேற்று முதல் பணி புரியத் தொடங்கி உள்ளனர்.

விலங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் இறைச்சி உள்பட அனைத்து உணவுகளும் முழு பரிசோதனை செய்த பிறகு தான் விலங்குகளுக்கு வழங்கப்படுகிறது.

பூங்காவில் தினந்தோறும் ஒரு வேளை கிருமி நாசினி தெளிக்கப்படும் நேற்றுமுன்தினம் வண்டலூர் பூங்காவுக்கு 10 ஆயிரத்து 438 பேர் வருகை தந்தனர். நேற்று அதிக அளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று 7,339 பேர் மட்டுமே பூங்காவுக்கு வருகை தந்தனர். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட நேற்று ஒரே நாளில் 3,099 பார்வையாளர்கள் வருகை குறைந்து விட்டது . கொரோனா வைரஸ் பீதி காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவிதமான தொற்று நோயும் ஏற்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story