அகமதுநகர், நாக்பூரில் பரபரப்பு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 7 பேர் திடீர் மாயம்


அகமதுநகர், நாக்பூரில் பரபரப்பு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 7 பேர் திடீர் மாயம்
x
தினத்தந்தி 16 March 2020 3:09 AM IST (Updated: 16 March 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அகமதுநகர் மற்றும் நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் தப்பிஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் மராட்டியத்தையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில் வேகமாக பரவக்கூடிய இந்த நோயை கட்டுப்படுத்த நோய் அறிகுறி உள்ளவர்களை சுகாதாரத்துரையினர் தனிமை வார்டில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அகமதுநகர் மாவட்ட சிவில் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தனிமை வார்ட்டில் கண்காணிக்கப்பட்டு வந்த 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் திடீரென மருத்துவமனையில் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் மாயமாகினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்து அவர்களை கண்டுபிடிக்க உதவி கோரி உள்ளனர்.

இதன்பேரில் மருத்துவமனையில் இருந்து தப்பிஓடிய 3 பேரையும் போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையே இரவில் 2 பேர் மருத்துவமனைக்கு திரும்பினர். ஆனால் மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தப்பிஓடிய 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததா? என்பது மருத்துவ அறிக்கை வந்த பின்னரே தெரியவரும்.

இதேபோல் நாக்பூரில் வெளிநாட்டில் இருந்த வந்த 2 பேர் மற்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த 2 பேர் என மொத்தம் 4 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் 4 பேரும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சையும் மீறி மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தொடர்புகொண்டு மருத்துவமனைக்கு திரும்ப அறிவுறுத்தியதை அடுத்து மருத்துவமனைக்கு திரும்பினர்.

அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.

Next Story