வியாபாரியை கொன்று நகை-பணம் கொள்ளை பத்திரிகை கொடுக்க வந்தது போல் நடித்து மர்ம நபர்கள் வெறிச்செயல்


வியாபாரியை கொன்று நகை-பணம் கொள்ளை பத்திரிகை கொடுக்க வந்தது போல் நடித்து மர்ம நபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 March 2020 12:30 AM GMT (Updated: 15 March 2020 9:55 PM GMT)

கும்பகோணத்தில் பத்திரிகை கொடுக்க வந்தது போல நடித்து வியாபாரியை இரும்பு கம்பியால் குத்தி கொன்று நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலகாவிரி பாலம் அருகே உள்ள காவிரி கரையில் வசித்து வந்தவர் ராமநாதன்(வயது63). இவர் கும்பகோணம் சண்முகம் தெருவில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயா. இவருடைய மகள் சரண்யா. இவரது கணவர் கோவிந்தராஜன்.சரண்யா ஒரே மகள் என்பதால் அவரது கணவர் கோவிந்தராஜனை ராமநாதன் தனது வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் சரண்யாவும், கோவிந்தராஜனும் திருச்சி அருகே உள்ள மணச்சநல்லூரில் நடந்த உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.

நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் ராமநாதனும், அவருடைய மனைவி விஜயாவும் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பத்திரிகை கொடுப்பதற்காக வந்து இருப்பதாக கூறி வீட்டுக்குள் வந்தனர். இதனால் டி.வி. சத்தத்தை விஜயா குறைக்க முயன்றுள்ளார். அதற்கு மர்ம நபர்கள் டி.வி. சத்தத்தை குறைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து மேலும் 3 பேர் ராமநாதன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

இரும்பு கம்பியால் குத்தி கொலை

இதையடுத்து மர்மநபர்கள் 5 பேரும் சேர்ந்து ராமநாதனை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்துள்ளார். பணம் தரவில்லை என்றால் உனது மனைவியை கொலை செய்து விடுவோம் என கூறி விஜயாவை வீட்டில் உள்ள ஒரு அறையில் அமர வைத்து விட்டு வந்தனர். அப்போது ராமநாதன் தனது மனைவியை எதுவும் செய்ய வேண்டாம் என கெஞ்சி உள்ளார். அதற்கு பணம் கொடுத்தால் உனது மனைவியை விட்டு விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்து ராமநாதன் மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார்.

நகை, பணத்தை வாங்கி கொண்ட மர்ம நபர்கள் உன்னை விட்டால் போலீசாரிடம் எங்களை காட்டி கொடுத்துவிடுவாய் என கூறி அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு கம்பியால் ராமநாதன் கழுத்தில் குத்தினர். இதில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அறையில் இருந்து விஜயா வெளியே வந்து பார்த்த போது ராமநாதன் பிணமாக கிடந்ததை கண்டு சத்தம் போட்டுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர்கள் ரமே‌‌ஷ்குமார், ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. இந்த மோப்பநாய் கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.பின்னர் ராமநாதன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் எண்ணெய் வியாபாரியை கொலை செய்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story