கலசபாக்கம் அருகே, பருவதமலையில் மயங்கி விழுந்த பக்தர் சாவு - போலீஸ் விசாரணை
கலசபாக்கம் அருகே உள்ள பருவத மலைக்கு நண்பர்களுடன் சென்ற போது மயங்கி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் சுமார் 4,500 அடி உயரமுள்ள மலைமீது ஏறிச் சென்று அங்கு உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் சாமியை தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் (வயது 27) என்பவர், தனது நண்பர்களுடன் பருவதமலை வந்தார். அவர் காலையில் மலைமீது ஏறினார். மலை உச்சி அருகே சென்றபோது சுமார் 4,000 அடி உயரத்தில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் உடன் சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் மயக்கமடைந்த காமராஜிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவரை டோலி கட்டி பொதுமக்கள் உதவியுடன் மலையிலிருந்து கீழே கொண்டு வந்தனர். ஆனால் அவர் வரும் வழியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காமராஜின் உடலை கைப்பற்றி அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் உடலை ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story