மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம் கலெக்டர் ரத்னா ஆய்வு


மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரம் கலெக்டர் ரத்னா ஆய்வு
x
தினத்தந்தி 16 March 2020 4:30 AM IST (Updated: 16 March 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், சுண்டக்குடியில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரத்துறை) சார்பில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மருதையாறு பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை கிழக்கு புற சாய்விலிருந்து தொடங்கி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வழியாக 70.40 கிலோ மீட்டர் தூரம் கடந்து இறுதியாக அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அதிகப்படியான வெள்ள நீர் மருதையாற்றில் வந்து இறுதியாக கொள்ளிடம் வழியாக எவ்வித பாசன நிலங்களுக்கும் பயன்பாடு இல்லாமல் கடலில் கலப்பதால், பொதுப்பணித்துறை, திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்டம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு மருதையாற்றின் குறுக்கே சுண்டக்குடி கிராமத்தில் ஒரு தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது.

ரூ.15 கோடி

தடுப்பணையினால் 70 பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதோடு 341.28 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும் சுமார் 300 ஏக்கர் பாசன நிலங்கள் மறைமுகமாக பாசன வசதியும் பெறும். உத்தேசிக்கப்பட்ட தடுப்பணையின் கொள்ளளவு 3.178 மில்லியன் கனஅடி ஆகும். மேற்குறித்த திட்டத்தினால், விவசாய பயன்பாடு மட்டுமின்றி, கால்நடைகள், பொது வினியோகம் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி ஆகியவை நிறைவடையும். மருதையாற்றின் குறுக்கே கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்பணையின் நீளம் 300 மீட்டர். தடுப்பணை கட்டும் பணி மற்றும் வெள்ளக்கரை அமைக்கும் பணி ஆகிய பணிகள் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தடுப்பணை கட்டும் பணிக்கான மதிப்பீடு ரூ.15 கோடி ஆகும் என்றார். பின்னர் கலெக்டர் காமரசவல்லி கிராமத்தில் உள்ள சுக்கிரன் ஏரியினை பார்வையிட்டு, ஆழப்படுத்தும் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசித்தார்.

ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, உதவிபொறியாளர் கமலகண்ணன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story