கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை: மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை: மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 March 2020 11:47 PM GMT (Updated: 15 March 2020 11:47 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதால் மக்கள் ஆதங்கப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெலகாவி,

பெலகாவி விமான நிலையத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கருதப்படும் 100-க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், அந்த நோயை எதிர்கொள்ள தேவையான எல்லா விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதுடன், தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கொரோனா அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் ஆதங்கப்பட வேண்டாம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கர்நாடக மேல்-சபை பா.ஜனதா உறுப்பினர் (எம்.எல்.சி.) மகாந்தேஷ் மகளின் திருமணம் நேற்று பெலகாவியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதவிர மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி, மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஸ்ரீமந்த் பட்டீல், சசிகலா ஜோலே உள்ளிட்ட பா.ஜனதா பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக திருமண நிகழ்ச்சிகளை விமரிசையாக நடத்தவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவதற்கும் முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பா.ஜனதா எம்.எல்.சி. மகளின் திருமணத்தில் எடியூரப்பா உள்ளிட்ட மந்திரிகள் கலந்து கொண்டது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திருமண விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பெலகாவியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா உடனடியாக பெங்களூருவுக்கு திரும்பினார்.

Next Story